“தமிழ” என்ற சொல் பொருள் நிறைந்தது. “தமிழ” என்பது, தமிழின மரபு, தமிழ் மொழி முதலியவற்றின் சார்பாக உள்ள செய்திகளைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பாரதியார் “விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய் - எனக்குரைப்பாயே” என்று பாடினார்.
“சாதி” என்பது இனம், தேசிய இனம் என்ற பொருளில்தான் பாரதியார் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, இத்தாலிய சாதி - ஒற்றைக்கட்டு போல் இருக்கிறது என்று கட்டுரை ஒன்றில் அவர் கூறினார். தமிழர் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் 19ஆம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்தன. ஐரோப்பாவில் 16 - 17ஆம் நூற்றாண்டுகளில் சுடர்விட்ட மறுமலர்ச்சிச் சிந்தனைகள் நமக்கு 19-ஆம் நூற்றாண்டில்தான் கனன்றது. பிற்கால சோழ - பாண்டியப் பேரரசுகள் வீழ்ச்சியடைந்த பின் - தமிழர்கள் அயல் இனங்களின் ஆட்சிகளில் சிக்கி அடிமைப்பட்டதுதான் இந்தக் காலத் தாழ்வுக்குக் காரணம்! தொடக்கத்தில் சுல்தான்கள் - பின்னர் விசயநகரத் தளபதிகள் மன்னர்கள் ஆட்சி, அடுத்து வெள்ளையர் ஆட்சி என்று நீண்டகாலம் அடிமை நிலை தொடர்ந்தது. அதுதான் நமது மறுமலர்ச்சி தாமதப்பட்டதற்கு அடிப்படைக் காரணம். வள்ளலாரைப் பாராட்டி பாரதியார் கூறியதை தஞ்சையார் நினைவுபடுத்தியுள்ளார். “எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க ஸ்வாமி. உலகில் உள்ள மத பேதங்களை எல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால் அதற்குத் தமிழ்நாடே சரியான களம்” என்றார் பாரதியார். மேலும், “தமிழ்நாடு இன்று புதிதாக அன்று - நெடுங்காலமாகத் தலைமையொளி வீசி வருதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்” என்றார் பாரதியார். வள்ளலார் 1865-இல் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் மனித நேயத்தை மட்டுமின்றி உயிர்நேயத்தையும் முன்வைத்தது. அந்த சங்கத்தில் சாதி, மத, சமய வேறுபாடு இன்றி ஆண் - பெண் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பினர் ஆகலாம். புலால் மறுப்பு மட்டுமே ஒரே ஒரு நிபந்தனை! வைதிக வர்ணாசிரம தர்மம் கோலோச்சிய காலத்தில் வள்ளலார் இந்த சமத்துவ சங்கத்தைத் தொடங்கினார். அதில் உறுப்பினர்கள் சேர்த்தார். “பிற்கால அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக விளங்கியது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்று தஞ்சையார் கூறுகிறார். |
|
|||
பக்கம் | 144 | ||
ரூ. 120.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2020 | ||
ISBN | 978-93-88546-30-0 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment