|
தொழில் முயற்சியும், அறிவியல் தொழில்நுட்பமும், தேர்தல் அரசியலும் இந்த அளவுக்கு பூமியை அச்சுறுத்தும் என்று, நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
செல்வ வெறியும், இனவாத செருக்கும் சேர்ந்து நாம் வாழும் புவிப்பந்தை வாழத் தகுதியற்றதாக மாற்றி வருகிறது. நமக்கு முந்தையத் தலைமுறையினர், காசு கொடுத்துத் தண்ணீர் வாங்குவோம் என்று கருதிப் பார்த்திருக்க மாட்டார்கள். நமக்கு அடுத்த தலைமுறை காற்றையும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டிய நிலை வரக்கூடும். உயிர் வாழ்வின் அடிப்படைக் கூறுகளான காற்றும், நீரும் காசுள்ளவர்களுக்கே என்ற நிலை “நாகரிக” வாழ்வின் “வளர்ச்சி” என்று கூறுவதுதான் வரலாற்று முரண்! சக மனிதர்களோடு அன்பு செலுத்தி, கோபப்பட்டு, சண்டையிட்டு மீண்டும் சமாதானமாகி, எந்தப் பெரிய அழிப்பும் இல்லாமல் அதைத் தூண்டும் எந்த மன அழுக்கும் இல்லாமல், வாழும் மனிதர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் தள்ளி வைக்கப்படுவதும், இயற்கையையும் சக மனிதர்களையும் சூறையாடுவது “நாகரிகம்” என்றும் வரையறுத்துக் கொள்வது எவ்வளவு கீழானது? “வளர்ச்சி” என்ற பெயரால், அண்மை நூற்றாண்டாக நடந்துவரும் பேரழிப்புகளை உடனே நிறுத்தாவிட்டால், அனைவரும் அழிவது உறுதி என்ற இறுதி நிலையை எட்டிவிட்டோம். அழிவின் விளிம்பில் இருக்கிற ஒரு உயிரினம், அழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்குப் போராடுவதுபோல் மனித இனம் தன்னையும், நாம் வாழும் பூமியையும் தற்காத்துக் கொள்ளும் இறுதிப் போராட்டக் கட்டத்தில் இருக்கிறது. சூழலியல் பேரழிப்பு உலகு தழுவியதாக இருந்தாலும், அதை சரி செய்வதற்கான பொது வழிமுறைகள் தீட்டப்பட்டாலும், அதை செயல் படுத்துவது என்பது நிலவும் வளச்சுரண்டல் - இன ஆதிக்கக் கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு நடக்காது! இயற்கைப் பேரழிவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சி, இயற்கையான தேசிய இன மரபு வளர்ச்சியின் வழியாகத்தான் நடைபெற வேண்டியிருக்கிறது. இதுகுறித்த கருத்தியல் விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. மனித குலத்திற்கு இன்றைய தேவை - புதிய கண்டுபிடிப்புகள் அல்ல! மாறாக, கண்டுபிடிப்புகளின் பேரழிவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதுதான்! இதுகுறித்த சிந்தனைப் பரிமாற்றம்தான் “சூழலியல் : அரசியல் - பொருளியல்” நூலாக வடிவம் கொண்டுள்ளது. |
|
|||
பக்கம் | 184 | ||
ரூ.150.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2020 | ||
ISBN | 978-93-88546-24-9 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment